Trending

Sunday 2 March 2014

இறங்குமுகத்தில் கொங்கதேச பொருளாதாரம்

கொங்கதேசம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. எல்லா தொழிலும் நசிந்து போய் உள்ளது. வட்டிக்கு கடன் வாங்க மக்கள் அலைமோதுகிறார்கள். ரூ.100க்கு 2 முதல் 3.5 ரூபாய் வட்டிக்கு நிலத்தை கிரயம் செய்து கடன் வாங்குகிறார்கள்!. ரியல் எஸ்டேட்ம் இனி பெரிய அளவில் வளராது; மாறாக வீழ்ச்சியை சந்திக்கும் வாய்ப்புக்கள் மிக அதிகம். இதற்கான காரணங்கள் குறித்து சிறு ஆய்வு.

·         கொங்கதேசத்தின் அடிப்படை பொருளாதார மூலமான விவசாயம் கடந்த நான்கு-ஐந்து வருடமாகவே தோல்விதான். நாம் இயற்கையை ஏமாற்றியதால் மழை  நம்மை ஏமாற்றியது. அதோடு, நான்கு லட்சம் ஏக்கர பாசன நிலம் இருந்த கர்நாடகா இப்போது காவிரி நீரை, ஏரிகள் வெட்டி தேக்கி சுமார் இருபத்தைந்து லட்சம் ஏக்கர அளவுக்கு விவசாயம் செய்கிறார்கள். வெள்ள வடிகாலாக மட்டுமே காவிரியை தமிழகத்திற்கு விடுகிறார்கள். மழையை மட்டுமே தற்போது நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆற்றங்கரை மரங்கள் கூட கருகி வருகின்றன. பனை காயும் அளவு நீர் வற்றி பஞ்சம் வந்த பாலைவனமாக கொங்க தேசம் மாறியுள்ளது.






காவிரி ஆற்று நடுவே போடப்பட்டுள்ள போர்.. 
இதிலும் தண்ணீர் வரவில்லை!


·       போன நாடாளுமன்ற தேர்தலில் கிளப்பப்பட்ட கறுப்பு பண பூதத்தால், வெளிநாட்டு பணம் பெருமளவில், பல வகைகளில் நாட்டுக்குள் பாய்ந்தது. மொரிசியஸ், ஷேர் மார்கெட் என. அவை கடசியாக ஐக்கியமானது ரியல் எஸ்டேடில். இன்று அந்த பண வரவு நின்று போய்விட்டது. இது இந்தியாவிற்கே பொதுவானது என்றாலும், அந்த பேரலையின் தாக்கம் கொங்கதேசத்தையும் பாதித்துள்ளது என்பதே நிதர்சனம். உள்ளே பணம் வந்த வேகத்தில் தங்கள் நகை எல்லாம் விட்ரு, பேங்கில் லோன் போட்டு ரியல் எஸ்டேட் செய்த பொது மக்கள், தற்போது அந்த வெளிநாட்டு பணவரவு நின்றுபோகவே, வெறும் நிலத்தை வைத்துக்கொண்டு பேந்த பேந்த விழிக்கிறார்கள். யார் யார் தலையில் கட்டிவிட்டு ஓடலாம் என்று பார்க்கிறார்கள். ரியல் எஸ்டேட் பலூன் விரைவில் வெடிக்கும்.

·     டெக்ஸ்டைல் துறை கடுமையான நசிவை சந்தித்து வருகிறது. பெரிய முதலீடுகள் பெருமளவில் குறைந்துவிட்டது. அதே சமயம் சூரத், குஜராத், பெங்களூர் என்று வெளிமாநிலங்களுக்கு முதலீடு செய்கிறார்கள். பல ஆயிரம் கோடி பணம் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டது. தொழில் செய்யும் வசதியான சூழல் இங்கு இல்லாமையே காரணம். நூற்பாலை முதல் பின்னலாடை வரை இந்த தேக்கம் தொடர்கிறது.



·  ஈமு, கொப்பரை, நாட்டுக்கோழி, பைன்பியூச்சர் போன்றவை வெளியில் தெரிந்த மோசடிகள். இவை மூலம் மட்டுமே 15 ஆயிரம் கோடிகளுக்கு மேல் பொதுமக்கள் பணம் களவாடப்பட்டுள்ளது. இவையன்றி, போரெக்ஸ், கமாடிட்டி, MLM, ரியல் எஸ்டேட் என்ற வகையிலும் பல மோசடிகளால் புழங்கும் பணம் முடக்கப்பட்டுள்ளது.



·   லாரி தொழில் தொடர் டீசல் விலையேற்றத்தால் கடுமையான நசிவை சந்தித்து தற்போது லாரிகள் வெறுமனே நிற்கின்றன.



· பத்திர பதிவு அலுவலகங்களில் பதிவுகள் வீழ்ந்து, நடக்கும் கிரயங்களும் போன வருடத்தை விட 20-30% டிஸ்கவுண்ட்ல் நடப்பதும் உண்மை.



இவ்வாறாக, லிக்விட் கேஷ் எனப்படும் புழங்கு பணம் கடுமையாக பெருமளவில் தடைபட்டுள்ளது. இன்றைய சூழலில் கொங்கதேசத்திற்கு (Fresh Money Inflow) புதுப்பணம் பாய்ச்சுவது ஏற்படுத்துவது, இன்னும் நீர்வளம் உள்ள பகுதிகளில் நடக்கும் விவசாயம் (இங்கும் நீர்வளம் வற்ற வெகுநாள் ஆகாது), ரிக் (இவ்வருடமும் சீசன் சரியில்லை என்பது தகவல்), வெளிமாநிலத்தில் கந்துக்கு பைனான்ஸ் தொழில் செய்பவர்கள், சில ஏற்றுமதியாளர்கள், கல்வி நிலையம் வைத்திருப்போர், வெளிநாடுகளில்-வெளியூர்களில் வேலை செய்வோர் (எகிறிய விலைவாசி-வெளியூர் முதலீடுகள் போன்றவற்றால் ஐடி இளைஞர் பண வரவு குறைந்துள்ளது) மற்றும் அரசியல்வாதிகள் பணம். மருத்துவம் வக்கீல் போன்றோர் மற்றும் கொங்கதேசத்திற்குள் ஏற்படும் சுழற்சி பணம் மதிப்பு கூட்டாமையால் கணக்கில் சேர்க்கவில்லை. கணிசமான பணப்புழக்கம் உள்ளோரும் விலைவாசி ஏற்றம், கல்வி செலவு, ஆடம்பர திருமணங்கள், வாழ்க்கை முறை என தவிர்க்க முடியா சமூக அழுத்தத்தால் சேமிப்பை தக்க வைக்க திண்டாடுகிறார்கள். எனவே இவ்வளவு நாள் இருந்தது போன்ற வளர்ச்சி, பணப்புழக்கம் மீண்டும் ஏற்ப்பட எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது சிக்கலான விஷயம் தான்.


இவை காட்டுவது, நீண்டகால இறங்குமுகத்தின் துவக்கம் என்று சொல்லலாம். கொங்கதேசம் தனி மாநிலமாக இருந்திருந்தால் மேற்கண்ட காரணிகளில் பெருமளவு தடுத்திருக்களாம், என்பதும் நிதர்சனமான உண்மை.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates